இந்த ஓவியங்களைப் பார்த்த இளவழுதி தான் சேர மன்னனைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் சரியாகத் தானிருக்கிறதென்று நினைத்தான். அரசன் கலைப்பிரியனென்றும், பெரிய கவியென்றும் அவன் கேள்விப்பட்டிருந் தான். தவிர சேரன் மகாவீரனென்றும், வாட்போரிலோ, விற்போரிலோ, மற்போரிலோ அவனை யாரும் வெற்றி கொள்ள முடியாதென்பதையும் அவனை சேர நாட்டுக்கு அனுப்பிய பெரியவர் சொல்லியிருந்தார். அவர் தன்னை எச்சரித்த முறை அப்பொழுதும் அவன் நினைவிலிருந்தது. “இளவழுதி; நீ உக்கிரப் பெருவழுதியின் வமிசத்தில் வந்தவன். அதனால் தான் தற்காலத்தில் பழக்கமில்லாத அந்தத் தூய தமிழ்ப் பெயரையொட்டி உனக்கு இளவழுதி யென்று பெயரிட்டேன். இப்பொழுது தமிழ்நாடு இருக்கும் நிலை உனக்குத் தெரியும். இஸ்லாத்தின் உருவியவாள் பாண்டிய அரசை இரண்டாக வெட்டி விட்டது. சில மாதங்களில் பெரும் அனர்த்தங்களை நாம் எதிர்பார்க்கலாம். இதிலிருந்து நாட்டைக் காப்பாற்றக் கூடியவன் சேரமன்னன் ஒருவன் தானிருக்கிறான். அவன் கலையில் கைதேர்ந்தவன். சமஸ்கிருதத்தில், பெரிய பண்டிதன், சமரில் நிகரற்றவன். அவனைத் தமிழகம் சங்கிரமதீரன் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கிறது. அவனை நீதான் இந்த நாட்டைக் காக்க அழைத்து வரவேண்டும்” என்றார் பெரியவர்.
“நான் எப்படி அரசரை அழைத்து வரமுடியும்?' என்று வினவினான் இளவழுதி.
“அவன் பெண்ணை முதலில் சந்தித்துவிடு. அவளிடம் இந்த ஓலையைக் கொடு” என்று கூறி ஒரு ஓலையையும் அவனிடம் கொடுத்தார்.
“'முடியாத பணியில் ஏவுகிறீர்கள், புலவரே! அரச குமாரியை நான் எப்படிச் சந்திக்க முடியும்?” என்று கேட்டான் இளவழுதி.
“உன்னால் முடியாது என்று நான் நினைத்திருந்தால் உன்னை நான் அனுப்ப மாட்டேன்” என்ற புலவர், “இன்றே புறப்படு, தொண்டியிலிருந்து கடல் மார்க்கமாக” என்றார்.
“ஏன் கடல் மார்க்கமாகப் போகவேண்டும்?” என்று வினவினான் இளவழுதி.
“தரை வழியை இஸ்லாமியப் படைகள் அடைத்து விட்டன. தவிர அஜ்மல்கானும் கடல் வழியாகத்தான் போகிறான்” என்று பெரியவர் கட்டிக் காட்டினார்.
“யாரது அஜ்மல்கான்”
“மதுரையை ஆக்ரமித்துவிட்ட மாலிக்காபூரின் அந்தரங்க ஒற்றன்.'
“அவன் ஏன் சேரநாடு செல்கிறான்?”
“எனக்குத் தெரியவில்லை.” சில வினாடிகளுக்குப் பிறகு.
“இளமதி. எத்தனை அழகான பெயர்” என்றான் இளவழுதி.
“அழகுக்குத் தகுந்த பெயர். நேரில் பார், சித்திரப் பாவையாயிருப்பாள்” என்றார் பெரியவர்.
அதற்குப் பிறகு அவர் ஏதும் சொல்லவில்லை.
அவனைத் தொண்டியில் கப்பலில் ஏற்றிவிட்டார். பத்து நாள் கப்பல் பயணத்துக்கப்பால் கொல்லம் துறை முகத்திலிறங்கியபோது இளமதியைச் சந்தித்த இளவழுதி, “இந்தப் பெண்ணே இத்தனை அழகாயிருக்கும் போது இளவரசி எப்படியிருப்பாளோ?” என்று எண்ணிப் பார்த்தான்.
அந்த எண்ணம் சித்திரமாளிகையின் முகப்புத் தாழ் வரையிலும் அவன் அகக்கண்ணில் எழுந்து உலாவியதால் சிறிது புன்சிரிப்பும் கொண்டான்.
இத்தகைய நினைப்புகளில் ஆழ்ந்து நிலைத்து நின்று விட்ட காரணத்தால் அம்மாளிகைத் தாழ்வரையின் கோடியிலிருந்த கதவு திறக்கப்பட்டதையோ, அதிலிருந்து ஆஜானுபாகுவான ஒரு மனிதன் வெளிப்போந்ததையோ இளவழுதி கவனிக்கவில்லை. அந்த உருவம் ஓசைப்படாமல் வந்து அவனுக்குப் பின்னால் நின்று அவன் தோள் மீது கையை வைத்தபின்பே கனவுலகத்திலிருந்து திரும்பிய இளவழுதி சட்டென்று தனது வாளின் பிடிமீது கையை வைத்தான்.
ஆனால் அந்தக் கையை அசைக்க முடியவில்லை அவனால். பின்னால் வந்த மனிதன் கையொன்று இளவழுதி யின் வலது கரத்தை இரும்பு சலாகையைப் போல் அசைய வொட்டாமல் பிடித்தது. அத்துடன் அந்த மனிதன் இளவழுதியின் காதுக்கருகில் குனிந்து, “வாளுக்கு அவசிய மில்லை. சத்தம் செய்யாமல் என்னைத் தொடர்ந்து வா” என்று மிக மெதுவாகக் கூறினான். பிறகு சட்டென்று திரும்பி, தான் வந்த கதவை நோக்கி நடந்தான்.
திடீரென நிகழ்ந்த அந்த விசித்திரத்துக்குக் காரணத்தை அறியாத இளவழுதியும் அந்த மனிதனைத் தொடர்ந்து சென்றான். அவனுடன் அந்த வாயிலிலும் நுழைந்தான். அவன் நுழைந்ததும் கதவு சட்டென்று தாழிடப்பட்டது. வந்த மனிதனின் இரும்புக்கை அவன் கையைப் பிடித்து உயர ஓடிய படிகளில் அவனை அழைத்துச் சென்றது. எங்கும் இருட்டாயிருந்தபடியால் படிகள் கண்ணுக்குப் புலப்படவில்லையானாலும் இள வழுதி அந்த மனிதனுடன் மிகுந்த எச்சரிக்கையுடன் ஏறிச் சென்றான். படிகளின் உச்சியில் விளக்கொன்று தெரிந்தது. அங்கே ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது இளவழுதிக்கு
அங்கு நின்றிருந்த உருவத்திடம் அந்த மனிதன் சொன்னான்: “கொண்டு வந்து விட்டேன் இவனை. எதற்கும் அந்த அறையில் வைத்துப் பூட்டி விடு” என்று.
அந்த உருவமும் அதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தது.
சேரன் செல்வி / Cheran Selvi
சாண்டில்யன் சரித்திர நாவல் - Chandilyan
Publisher: வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Category: சரித்திர நாவல்கள் | Historical Novels, Classics | கிளாசிக்ஸ்
Page: 456 pages
Edition Language: Tamil