இந்தியர்களாகிய நாம் யார்?
நாம் எங்கிருந்து வந்தோம்?
நம்முடைய முன்னோர்களைப் பற்றிய கதையை நமக்குச் சொல்வதற்காக, பத்திரிகையாளர் டோனி ஜோசஃப், வரலாற்றின் ராஜபாட்டையில் 65,000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளார். ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்கப்படுகின்ற நவீன மனிதர்களின் குழு ஒன்று ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, கடும் சவால்களின் ஊடே முதன்முதலாக இந்தியாவை வந்தடைந்ததிலிருந்து அக்கதை தொடங்கிறது. அதற்குப் பிறகு, கி.மு. 7000க்கும் கி.மு. 3000க்கும் இடைப்பட்டக் காலத்தில் ஈரானிலிருந்து புறப்பட்ட வேளாண்குடியினர் இங்கு வந்து குடியேறுகின்றனர். பின்னர் கி.மு. 2000க்கும் கி.மு. 1000க்கும் இடைப்பட்டக் காலத்தில் மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதியிலிருந்து வந்த மேய்ப்பாளர்கள் இங்கு நுழைகின்றனர்.
தொல்லியல், மரபியல், வரலாறு, மொழியியல், கல்வெட்டியல் மற்றும் பிற துறைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், டோனி ஜோசஃப் நம்முடைய கடந்தகாலத்தைப் படிப்படியாகத் திரைவிலக்கும்போது, இந்திய வரலாற்றோடு தொடர்புடைய, மிகவும் சர்ச்சைக்குள்ளான, அசௌகரியமான பல கேள்விகளைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளுகிறார். அவற்றில் சில:
• சிந்து சமவெளி நாகரிகத்தை அல்லது ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் யார்?
• ஆரியர்கள் உண்மையிலேயே வெளியிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தவர்களா?
• மரபியல்ரீதியாக வட இந்தியர்கள் தென்னிந்தியர்களிடமிருந்து வேறுபட்டவர்களா?
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்நூல், நவீன இந்தியர்களின் மூதாதையர் குறித்தப் பல அநாகரிகமான விவாதங்களுக்குத் துணிச்சலுடனும் ஆணித்தரமாகவும் முற்றுப்புள்ளி வைப்பதோடு, நாம் யார் என்பது குறித்த மறுக்க முடியாத முக்கியமான உண்மை ஒன்றையும் எடுத்தியம்புகிறது. அந்த உண்மை இதுதான்:
நாம் அனைவருமே வெளியிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள்தாம்! நாம் அனைவருமே கலப்பினங்களைச் சேர்ந்தவர்கள்தாம்!
ஆதி இந்தியர்கள் / Early Indians
Author: டோனி ஜோசஃப்
Translator: PSV குமாரசாமி
Language: தமிழ்
Page: 284
Publisher: Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Category: Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, Anthrapology | மானுடவியல், Essay | கட்டுரை
Published on : 2020
ISBN: 9789390085040