top of page

தஞ்சையைக் கடைசியாக ஆண்ட மன்னர் பரம்பரை என்றால் அது மராட்டியர்கள்தான். அரபிக்கடலோரம் இருந்தவர்கள் தஞ்சைத் தரணியின் அதிபதிகளானது ஒரு அதிசயம் என்றால், அவர்களும் இந்த மண்ணுடனேயே இரண்டறக் கலந்துவிட்டது மற்றோர் அதிசயம். மராட்டிய மன்னர்கள் அனைவருமே மராட்டியையும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தது போலவே தமிழிலும் தெலுங்கிலும் கூட புலமை பெற்றவர்களாக இருந்தனர். இன்றும் தஞ்சைப் பெரிய கோவிலின் அறங்காவலர்கள் அந்தப் பரம்பரையினர்தான்.

தஞ்சையின் மிகப் பெரிய அரசு மருத்துவமனையான ராஜா மிராசுதார் மருத்துவமனை இருக்கும் இடம் ஒரு காலத்தில் ராணி தோட்டம் என்ற பெயரில் காமாட்சியம்பா பாயி என்ற அரசிக்கு சொந்தமானதாக இருந்தது. தஞ்சை மராட்டிய வம்சத்தின் கடைசி அரசராக இருந்த சிவாஜியின் பட்டத்தரசியான அப்பெண்மணி மருத்துவமனை அமைக்க தனது தோட்டத்தையும் அளித்து, நன்கொடையும் தந்தார். இப்படியாக தஞ்சைக்குள்ளும், வெளியேயும் பல்வேறு நலப் பணிகள், கோவில்கள், சத்திரங்கள் என மராட்டிய அரச வம்சத்தினரின் கொடையாக நீடித்து நிற்கும் நற்செயல்கள் பல உண்டு.

எந்த வம்ச வரலாறும் ஒளிமயமான பக்கம் மட்டுமே கொண்டதாக இருக்க முடியாதில்லையா? அப்படித்தான் தஞ்சையின் வரலாறும். சரஸ்வதி மகால் போன்ற அற்புதமான கலைக்களஞ்சியத்தை அமைத்தவர்கள்தான் வாட்டர்லூ போரில் பிரஞ்சு மன்னன் நெப்போலியனை பிரிட்டிஷ் படை வென்றதிற்காக, அதைக் கொண்டாட மனோரா எனும் நினைவு(அடிமை)ச் சின்னத்தையும் கட்டினார்கள்.

ஒரு புறம் ஆன்மீகத் தேடல் கொண்ட மன்னர்களாக இருந்தபோதே இன்னொரு புறம் கொத்துக் கொத்தாகப் பெண்களை போகப் பொருட்களாக துய்த்தும் மகிழ்ந்தார்கள். கடைசி அரசரான சிவாஜி தன் மூன்று மனைவியருக்கும் குழந்தைகள் இல்லை எனும் காரணத்தினால் ஒரே நாளில் 17 பெண்களை மணம் புரிந்தார். அந்தப் பதினேழு பேரில் மிகவும் இளையவருக்கு அப்போது 6 வயதுதான். மிகவும் மூத்த பெண்ணுக்கோ பன்னிரெண்டே வயதுதான்.

மோகமுள் நாவலில் யமுனா தஞ்சை அரண்மனையின் வழிகாட்டி மராத்திய அரசர்களைப் பற்றி விவரிப்பதை சொல்லி சிரிப்பாள். “இவுங்கதான் __ஜி மகராஜா. இவருக்கு கல்யாணம் பண்ணின ராணிமார் 4 பேரு. அபிமானமா இருந்தவங்க பதினஞ்சு பேரு. இவங்க __ஜி மகாராஜா. இவருக்கு ராணிங்க 3 பேரு, அபிமானம் 8 பேரு” இப்படியாக நீளும் பட்டியலைச் சொல்லி கசந்து கொள்வாள் யமுனா.

அந்த கசப்பான வரலாற்றின் ஒரு துளிதான் இந்த நாவலின் அடிப்படை. ராணியாக வந்து வாழ்ந்தவர்களுக்காவது வரலாற்றில் பெயரும், அரண்மனைச் சுவற்றில் ஒரு தைல ஓவியமாகவேனும் தொங்கும் பாக்கியமும் இருந்தது. அந்தப்புரத்தின் வேலைகளைச் செய்வதற்கும், தேவைப்பட்டால் அரசருக்குப் பயன்படவுமாக காசு கொடுத்து வாங்கப்பட்ட அடிமைப் பெண்களுக்கு எந்த அடையாளமும் கிடையாது. அவர்களின் வாழ்வெல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் போன்றதுதான். ஆனால் அப்படியான அடிமைப் பெண்ணொருத்தியின் பெயரும், பூர்வீகமும் வரலாற்றில் எதிர்பாராத விதமாகப் பதிவாகியுள்ளது. இது அந்த ஆனந்தவல்லியின் கதை.

ஆனந்தவல்லி / Anandavalli

CHF19.00Preis
  • Author:              Lakshmi Balakrishnan, லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

    Publisher:         பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)

    No. of pages:   248

    Language:       தமிழ்

    Published on:  2022

    Book Format: Paperback

     Category:      Novel | நாவல், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

    Asin:                 9789355232229

bottom of page